About Me

My photo
00000000000000000000000000000000

Monday, January 30, 2012

பாம்பாட்டிச் சித்தர்பாடல்

 பாம்பாட்டி ஒருவர் பாம்புகள் பிடிப்பதில் வல்லவர். எத்தகைய கொடிய
விஷமுள்ள  பாம்பும்  இவர்  கண்  பார்வைக்கும், கைப்பிடிக்கும் தப்பித்துச்
செல்ல  முடியாது.  பக்கத்திலுள்ள  காடு ஒன்றில் நவரத்தினப் பாம்பொன்று
இருப்பதாகக் கேள்விப்பட்டு அக்காட்டினுள் சென்றார்.

     இரவு  நேரம். இருட்டில் பாதை தெரியாமல் தட்டுத் தடுமாறிக்கொண்டு
காட்டினுள்  நடந்து  கொண்டிருந்த   பாம்பாட்டியின்  எதிரே  பிரகாசமான
ஒளியுடைய   பாம்பொன்று  மெல்ல  ஊர்ந்து  கொண்டு  சென்றது.  அதன்
அழகில்,  அதன்  ஒளியில்  ஆட்பட்டு  அதனைப்  பிடிக்கவும்  செய்யாமல்
பிரமிப்புடன் நின்று கொண்டிருந்தார்.
     தேடிப்போன  புதையலைக்  கண்ணெதிரே   கண்டுங்கூடக்  கைப்பற்ற
முடியாதவராகி  ஏதோ  சிந்தைனையில்  அப்படியே  ஆடாமல் அசையாமல்
நின்றார்.   கொஞ்ச   நேரத்தில்   அந்தப்   பாம்பு  தவயோகி  ஒருவராக
வடிவமெடுத்து நின்றது. அவர்தான் சட்டைமுனி சித்தர்.
     இந்த சட்டைமுனி சித்தர்  அந்தப் பாம்பாட்டிக்கு நல்லறிவு புகட்டினார்.
உலக   நிலையாமையைக்  கூறினார்.  பின்னர்  அவருக்குத்  தீட்சையளித்து
மறைந்தார்.
     நடந்தது   கனவா!  நினைவா!  என்று  திகைத்து  நின்ற  பாம்பாட்டி
மெய்ஞானம் கைவரப்பெற்று நாட்டினுள் சென்றார். அக்காலத்தில் அந்நாட்டு
அரசன் மரணமடைந்து

விடவே  அனைவரும்  பெருந்துக்கத்தில்  இருந்தனர்.  அவர்களின் துக்கம்
தீர்க்கவும்,  தாம்  பெற்ற  தவ  சக்தியைப்  பரிட்சித்துப் பார்க்கவும் இறந்த
அரசனின் உடலில் புகுந்து அதிசயம் நிகழ்த்தினார். எல்லோருக்கும் மகிழ்ச்சி.
     பிழைத்து  எழுந்த மன்னர்  அருகில் இருந்த  செத்த பாம்பொன்றைக்
கண்டார். பாம்பே! நான் எழுந்து விட்டேன். நீயும் எழுந்திரு என்றார். என்ன
ஆச்சிரியம்;   செத்த  பாம்பு  நெளிந்தது.  அனைவரும்  வியப்படைந்தனர்.
பாம்பு, கூட்டத்தைப் பார்த்துப் பயந்து ஓட முயற்சித்தது.
     மன்னர்  அந்தப்  பாம்பைப்  பார்த்தார்.  பாம்பே எங்கே போகிறாய்.
இறந்துபோன  நீ  இப்பொழுது  எழுந்து  விட்டாய். இன்னுமா உலக ஆசை
உனக்கு  விடவில்லை?   உலக   வாழ்வில்   ஏமாந்து  போகாதே  என்று
சொன்னவர்.    ‘ஆடு  பாம்பே’    என்று   ஆணையிட்டார்.   மன்னரின்
கட்டளைக்குக்   கட்டுப்பட்ட  பாம்பு   மகுடி   வாசிக்காமலேயே   ஆடத்
தொடங்கியது.   பாம்பை    முன்னிலைப்படுத்தி   அற்புதமான   தத்துவப்
பாடல்களைப் பாடத் தொடங்கினார். தான் ஒரு சித்தர் என்பதையும் மன்னர்
உடம்பில் தான் புகுந்திருப்பதையும் குறிப்பாக உணர்த்திப் பாடினார்.
     ஆனால் அவர் பாடியதன் பொருள் யாருக்கும் புரியவில்லை. பிழைத்து
விட்டாரே தவிர, அவருக்குக் கிறுக்கு பிடித்து விட்டது போலும் என்று கூறிக்
கூட்டத்தினர் கலைந்து சென்றனர்.
     மன்னரின்  செயல்கள்  மகாராணிக்கு  ஆச்சரியமாயிருந்தது. முரட்டுப்
பிடிவாதமும்,  பெண்கள் சுகமும்  என்று சுகபோக வாழ்க்கை வாழ்ந்த இவர்
எப்படி இப்படி தத்துவ அறிவு பெற்றார் என்று சந்தேகப்பட்டாள்.
“நாடுநகர் வீடுமாடு நற்பொருளெல்லாம்
நடுவன் வரும்பொழுது நாடிவருமோ
கூடுபோனபின் பவற்றாற் கொள்பயனென்னோ
கூத்தன் பதங்குறித்துநின் றாடாய்பாம்பே”
     ராணிக்கு  ஒரே  அதிர்ச்சி.  தன்  மனதில்  எழுந்த  சந்தேகத்திற்குப்
பதிலளிப்பது  போல்  இப்படிப் பாடுகின்றாரே, மா, பலா, வாழை, பெண்கள்
என்று  கனிரசமும்  காமரசமும்  பருகி வாழ்ந்தவர் இன்று கூத்தன் பதத்தை
அல்லவா   பாடுகின்றார்   என்று   வியப்படைந்தாள்.   அவர்  வியப்பை
அதிகமாக்குவதைப் போல் மேலும் சில பாடல்களைப் பாடினார்.
“மாடகூட மாளிகைகள் வண்ண மண்டபம்
மதில்சூழ்ந்த வரண்மனை மற்றும் முள்ளவை
கூடவாரா வென்றந்தக் கொள்கை யறிந்தோர்
குலவாமல் வெறுப்பாரென் றாடாய் பாம்பே”

“மலைபோன்ற செம்பொற்குவை வைத்திருப்பவர்
மறலி வருகையில் வாரிச்செல்வரோ
அலை யாமலகத்தினை யத்தன் பால்வைத்தோர்
அழியாரென்றே நீ துணிந்தாடாய் பாம்பே”

“பஞ்சணையும் பூவணையும் பாயலும் வெறும்
பாழ்சுடு காடதிலே பயன் பெறுமோ
மஞ்சள் மணம்போய் சுடு நாறு மணங்கள்
வருமென்று தெளிந்து நின்றாடாய் பாம்பே”

“முக்கனியுஞ் சக்கரையு மோதகங்களும்
முதிர்சுவைப் பண்டங்களு முந்தியுண்டவாய்
மிக்கவுயிர் போனபின்பு மண்ணை விழுங்க
மெய்யாகக் கண்டோமென் றாடாய் பாம்பே”
     ஆகா   எத்தனை   தத்துவார்த்தமான   பாடல்கள்.  பெண்ணாசை
விலக்கலைப் பற்றியும் பாடத் தொடங்குகின்றார்.
“வெயில்கண்டமஞ்சள் போன்ற மாதரழகை
விரும்பியே மேல்விழுந்து மேவுமாந்தர்
ஒயில்கண்டே யிலவுகாத் தோடுங்கிளிபோல்
உடல் போனாலோடு வாரென்றாடாய் பாம்பே”
     போதும் என்று அவரை கையெடுத்துக் கும்பிட்ட ராணி, ஐயா, தாங்கள்
யார்? எங்கள் அரசரா? அல்லது  யாராவது மகானின் ஆத்மா இந்த உடலில்
புகுந்துள்ளீரா? என்று கேட்டாள்.
     சித்தரும்  அவளுக்கு  நடந்த  உண்மைகளைக்  கூறினார். சில காலம்
இவ்வுடலில்   வசிக்க   வேண்டிய   கட்டாயத்தையும்   கூறி   அவளுடன்
இல்வாழ்க்கையைத் தாமரை இலைத் தண்ணீர் போலத் தொடர்ந்தார்.
     இவர் சித்தராய்த் திரிந்த காலத்து இவருடைய சீடர்களாய் இருந்தவர்கள்
தம் குருநாதர் நீண்ட நாட்களாய் வராமை கண்டு பின்னர்த் தம் குருவருளால்
அவரிருக்குமிடமறிந்து,  அவர்  தம்  பழைய  உடலுக்குத் திரும்பும்வண்ணம்
பொருளமைந்த   சில   பாடல்களைப்   பாடினார்கள்.  பின்னர்  அன்றிரவு
வெட்டியான்   வேடம்  பூண்டு  நான்கு  சாமத்துக்கும்  பின்வரும்  நான்கு
வெண்பாக்களைப்   பாடிப்  பறையடித்துக்  குருவை  மீட்டுச்  சென்றதாகக்
கூறப்படுகிறது.
“ஆலஞ்சரீரம் அநித்தியம் என்று எண்ணாக்
காலன் தினம் வருவான் காணுங்கள் - காலன்
கலங்காத கண்டன்நற் கண்மணியைப் போற்றி
உறங்கி யுறங்காது இரு”

“வானமணித் தேவர் வனத்திலுள வைவேடர்
ஞானமணி யைத்திருட நன்னினார் - ஞானம்
நிறுங்காலம் தானறிந்து நல்லுணர்வை நாடி
உறங்கி உறங்காது இரு”

“ஆசையினால் பாசம் அளவிறந்த கர்மமிது
ஆசைவிட்டுப் போவது அரிதரிது - ஆசை
அறுங்காத லாகி அரனடியைப் போற்றி
உறங்கி உறங்காது இரு”

“தந்தைதாய் பந்துசனம் தாரம் சகோதரர்கள்
விந்துநிலை அறியா வீணரே - விந்து
வெறும் பாழ் என்று எண்ணியே மெய்யுணர்வை நாடி
உறங்கி உறங்காது இரு”
     பாம்பாட்டிச்   சித்தர்   விருத்தாசலத்தில்   சித்தியடைந்ததாகச்  சில
நூல்களும்  துவாரகையில்  சித்தியடைந்ததாக  சில  நூல்களும் கூறுகின்றன.
பாம்பாட்டி  சித்தரின்  பாடல்கள்  பெரும்பாலும்  தாயுமான  சுவாமிகளின்
பாடல்களை  அடியொற்றியே  இருப்பதால்  இவர்  அவரின்  காலத்திற்குப்
பிற்பட்டவராக இருக்கலாம் என்ற முடிவுக்கு வரவேண்டி உள்ளது.
     தாயுமானவரின்  சித்தர்   கனம் பகுதியைப் போலவே இவரும் ‘சித்தர்
வல்லபங்கூறல்’  பகுதியைப்  பாடியுள்ளார்.  இஃதோர்  கலம்பக  உறுப்பாய்
பிரபந்தம் பாடுதலின் பாற்பட்டதாகும்.
     நாங்களெல்லாம் சித்தர் கூட்டத்தைச் சேர்ந்தவர்களாவோம். எங்களுக்கு
அபூர்வ சக்திகள் பல உண்டு. அவைகள் என்ன தெரியுமா?
     தூணைச்   சிறுதுரும்பாகத்   தோன்றிடச்   செய்வோம்,   துரும்பைப்
பெருந்தூணாகத்   தோன்றிடச்   செய்வோம்,   ஆணைப்   பெண்ணாகவும்
பெண்ணை  ஆணாகவும்  மாற்றிக்  காட்டுவோம். எட்டுமலைகளைப் பந்தாய்
எடுத்தெறிவோம்,  ஏழுகடல்களையும்  குடித்து, ஏப்பம் விட்டுக் காட்டுவோம்,
வானத்தை வில்லாக வளைத்திடுவோம்,
மூண்டெரியும்    அக்கினிக்குள்ளே    மூழ்கிவருவோம்,    தண்ணீருக்குள்
மூச்சடக்கியும்  இருப்போம்,  இந்த  நிலவுலகை மட்டுமல்லாது இன்னுமுள்ள
உலகமத்தனையும்  பொன்மயமாக்கிக் காட்டுவோம், பிரம்மா போல புதுப்புது
உயிர்களைப்  படைத்துக் காட்டுவோம், சூரியனின் செங்கதிரையும் நிலவைப்
போல  தன்கதிராய்  மாற்றிக்  காட்டுவோம்,  கொடிய  மிருகங்களான புலி,
யானை,  யாளி,  சிங்கம்  முதலான  விலங்குகளை எங்களுக்குக் குற்றேவல்
செய்யச்  சொல்லுவோம்.  சக்தி  வாய்ந்த  கடவுளுக்குச்  சமமாக  நாங்கள்
இருப்பதால்  அவரை  எங்களுடன்  விளையாடவும்  அழைப்போம்,  இந்த
உலகத்தை இல்லாமற்கூட செய்து காட்டுவோம், எத்தனை பெரிய வித்தகரும்
அறுபத்து  நான்கு  கலைகளை  மட்டுமே  அறிவார். நாங்களோ அதற்கும்
மேலாக  ஒரு  கலையையும்  அறிவோம். இதற்கெல்லாம் காரணம் நாங்கள்
இறைவன்   மேல்   பற்றும்   ஏனைய   பொருள்களின்  மேல்   பற்றும்
இல்லாதவர்களாயிருப்பதே  என்று   சித்தர்களின்   வல்லபத்தைக்   கூறி
முடிக்கின்றார் பாம்பாட்டிச் சித்தர்.

No comments:

Post a Comment