About Me

My photo
00000000000000000000000000000000

Monday, January 30, 2012

பாம்பாட்டிச்சித்தரின் விடுகதைகள்

  பெரும்பாலானப் பாடல்கள் விடுகதை நோக்கிலேயே அமைந்துள்ளன.
உதாரணமாக சருர குணம் சொல்லும் பகுதியில்,
பரியாசம் போலவே கடித்த பாம்பு
பலபேரறியவே மெத்தவீங்கிப்
பரியார மொருமாது பார்த்தபோது
பையோடே கழன்ற தென்றாடாய் பாம்பே
என்ற     பாடலில்     பெண்ணொருத்தி     விளையாட்டு     போலவே
ஆடவனொருவனைப்   புணர   அது  கர்ப்பமாய்  உருக்கொள்ள  இதற்குப்
பரிகாரம் என்னவென்று யோசிக்கும் வேளையில்
அது பிரசவமாகி குழந்தை பிறந்து விட்டது என்பதுதான் தெளிபொருள்.
     விடுகதையில்  வரும்போது  பாம்பு  ஒன்று  விளையாட்டாய் ஒன்றைக்
கடித்துவிட,  அதனால்  பாம்புக்கு  வீக்கமேற்பட்டு  விட்டது. இதற்கு என்ன
வைத்தியம்   என்று   தேடியபோது,   கடிபட்ட  அந்த  விறப்பையிலிருந்த
வீக்கத்திற்குக்  காரணமான  பொருள்  வெளியேறி  விட்டது.  அது என்ன?
இதற்கு விடையறிய பாடலிலேயே ‘மாது’ என்ற வார்த்தையை யூகத்திற்கொரு
பொருளாகச்   சொல்லிப்   பார்க்கிறார்.   மேலே  சொன்ன  விடுகதையை
பெண்ணுக்குப் பொருத்திப் பார்க்க வேண்டும்.
     பெண்களின்  அல்குலை  பாம்புக்கு  ஒப்பிடுவர்.  அந்தப்  பாம்பானது
விளையாட்டாய் கடித்த பொருள் ‘ஆணின் கற்பு’. பெண்ணானவள் ஆணோடு
புணர்ந்தது.  யாருக்கும்  தெரியாமல்  இரகசியமாய்ச்  செய்த  இந்தச் செயல்
பலரறியும்படி  உடலானது  வீங்கிக்  காட்டிக்  கொடுத்து  விட்டது. அதாவது
கர்ப்பமடைந்து வயிறு வீங்கி விட்டது.
     இதனை  எப்படி  சமாளிப்பது  என்று  யோசித்துக்  கொண்டிருக்கும்
வேளையில்  கர்ப்பத்தில்  தங்கியிருக்கும்  சிசுவானது  கர்ப்பபையை விட்டு
வெளியே பிரசவமாகி வந்துவிட்டது. அவளது பிரச்சனையும் தீர்ந்தது.
எப்படி இருக்கிறது விடுகதை?
‘நாலுத்தெருவிலே நாலுகம்பம்
நடுத்தெருவிலே பொன்னுக்கம்’
என்று விடுகதையொன்று போட்டுவிட்டு நம்மை விடை காணச் சொல்கின்றார்
பாம்பாட்டிச் சித்தர்.
கடுவெளிச்  சித்தரைப்  போன்று  இவரும்  குயவனார் மண் தோண்டி
விடுகதையைப் பாடுகின்றார்.
‘ஊத்தைக் குழிதனிலே மண்ணையெடுத்தே
உதிரப் புனலிலே யுண்டை சேர்த்தே
வாய்த்த குயவனார் அவர் பண்ணும் பாண்டம்
வறையோட்டுக்கு மாகாதென் றாடாய் பாம்பே’
     இதில்  மட்பாண்டம்  செய்யும்  மூலப்பொருள்  கூறப்படுகிறது. இப்படி
ஊத்தைக்  குழியிலே  மண்ணை  எடுத்துக் குருதிப்புனலிலே உண்டையாக்கி
குயவனார்  செய்த  மட்பாண்டம்  இறுதியில்  பிச்சையெடுக்கும்  திருவோடு
அளவுக்குக்கூடப் பயனாவதில்லை என்று கூறுகின்றார்.
     இரண்டு  பேர் மண் சேர்த்துப் பிசைய ஒருவர் பானை செய்து அவரே
பத்து மாதம் சூளையில்  வைத்துப் பக்குவமாய்  இறக்கி வைத்தாலும் அந்தப்
பானையானது இறுதியில்  அரைக்காசுக்குக்கூட  உதவாது என்று இந்த உடல்
நிலையாமையைக் கூறுகின்றார் பாம்பாட்டிச் சித்தர்.
‘இருவர் மண்சேர்த்திட வொருவர் பண்ண
ஈரைந்து மாதமாய் வைத்த சூளை
அருமையா யிருப்பினு மந்தச்சூளை
அரைக்காசுக் காகா தென் றாடாய்ப் பாம்பே’
     மனிதர் என்னதான் தான் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் தேடினாலும்
அதற்கான  தண்டனை  நிச்சயம்  உண்டு என்று இந்தச் சித்தர் அறுதியிட்டுக்
கூறுகின்றார்.
     நாறுகின்ற  மீனைப்  பல  தரம் நல்ல தண்ணீர் ஊற்றிக் கழுவினாலும்
அதனது  இயல்பான  நாற்றம்  போகாது.  அதுபோல  மனிதன் என்னதான்
பரிகாரங்கள்   செய்தாலும்   அவன்   செய்த  பாவ  வினைகள்  அவனை
விட்டகலாது அவனைத் தண்டித்தே தீரும் என்பதை,
“நாறுமீனைப் பலதரம் நல்ல தண்ணீரால்
நாளுங் கழுவினு மத னாற்றம் போமோ
ஊறுமுடல் பலநதி பாடிக் கொண்டதால்
கொண்டமல நீங்கா தென்றா டாய் பாம்பே”
     என்னதான்  புனித  நீராடினாலும் பாவங்கள் தண்டனைக் குரியவையே
என்பது பாம்பாட்டியாரின் தீர்ப்பாகும்.
     பொம்மலாட்டம்  தெரியுமா?  திரைக்குப்  பின்னாலிருந்து சூத்திரதாரி
ஒருவன் இயக்க, பாவைக் கூத்தாடும்  நாடகக் காட்சியைப் போன்றது நமது
வாழ்க்கை என்பதைப் பின் வரும் பாடலால் விளக்குகின்றார்.
“மரப்பாவை போலவொரு மண்ணுருச் செய்து
வளமான சீவனென்னுந் சூத்திர மாட்டித்
திரைக் குள்ளிருந்தசைப் போன் தீர்ந்த பொழுதே
தேகம் விழுமென்று தெளிந் தாடு பாம்பே”
     இன்னும் இந்த உடல் நிலையில்லாது என்பதை,
“சீயும் மலமுஞ் செந்நீரும் நிணமும்
சேர்ந்திடுதுர் நாற்றமுடைக் குடமதுஉடைந்தால்
நாயும் நரியும் பேயும் கடுகும்
நமதென்றே தின்னு மென்றடாய் பாம்பே”
     எவ்வளவு  சீரும்  சிறப்புமாய்  வளர்த்த  இந்த  உடலானது உலகில்
பார்க்கின்ற பொருளையெல்லாம் தனதென்றே சொந்தம் கொண்டாடும், சீழும்
குருதியும்  மலமும்  சேர்ந்த  இந்த நாற்றக்குடமான உடல் இறந்து விட்டால்
நாயும்,  நரியும்,  பேயும்,  கழுகும்  என்னுடையது இந்த உடல் என்று பங்கு
போட்டுச்  சாப்பிட  ஆரம்பித்து  விடும்.  இப்பொழுது சொல்லுங்கள், இந்த
உடல்  நம்முடையதா?  அல்லது  நாய்  நரிகளுக்குச் சொந்தமானதா? என்று
கேள்வி விடுக்கின்றார் பாம்பாட்டி.
  இந்தப் பாடலானது பட்டினத்தாரின் உடற்கூற்று வண்ணப் பாடல்களுடன்
ஒப்பு நோக்கி ஆராயத்தக்கது.
     “எரியெனக்  கென்னும்  புழுவோவெனக்  கென்று  மிந்த  மண்ணுஞ்
சரியெனக்   கென்னும்   பருந்தோ   வெனக்   கென்னும்   தான்  புசிக்க
நரியெனக்கென்னும் புன்னாயெனக் கென்னும் இந்த நாறுடலைப் பிரியமுடன்
வளர்த்தே னிதனாலென்ன பேறெனக்கே”
     பாம்பாட்டியின்,

இருவர் மண்சேர்த்திட வொருவர் பண்ண
ஈரைந்து மாதமாய் வைத்த சூளை
அருமை யாயிருப்பினு மந்தச்சூளை
அரைக்காசுக் காகா தென்றாடாய் பாம்பே
     இந்தப் பாடலும்,

பரியாசம் போலவே கடித்த பாம்பு
பலபேரறியவே மெத்த வீங்கிப்
பரியார மொருமாது பார்த்தபோது
பையோடே கழன்ற தென்றாடாய் பாம்பே
     இந்தப்  பாடலும்  பட்டினத்தாரின்  உடற்கூற்றுப் பண்ணப் பாடலுடன்
ஒப்பு நோக்கத்தக்கது.
ஒருமடமாதும் ஒருவனும் ஆகி இன்பசுகம்தரும்
அன்பு பொருந்தி உணர்வுகலங்கி ஒழுகியவிந்து
ஊறுசுரோணிதம் மீது கலந்து
பனியில் ஓர் பாதி சிறுதுளிமாது பண்டியில் வந்து
என்ற பாடல் பாம்பாட்டிச் சித்தரின் மேற்கண்ட பாடலுடன் ஒத்துப் போவதை
ஒருங்கு காணலாம். இன்னும்,
மனையாளும் மக்களும் வாழ்வுந் தனமுந்தன் வாயின் மட்டே
யினமான சுற்ற மயான மட்டே வழிக்கேது துணை
என்ற பட்டினத்தாரின் பாடல் கருத்து பாம்பாட்டியின்,
“மக்கள் பெண்டிர் சுற்றமரு மக்கண் மற்றவர்
மாளும் போது கூடவவர் மாள்வதில்லையே”

பாடலோடு ஒத்து விளங்குவது இங்கு ஒப்புநோக்கத்தக்கது.

No comments:

Post a Comment